இந்திய பயணத்தை ஒத்திவைத்து எலான் மஸ்க் சீனாவுக்குச் சென்றது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீர் ரத்து: உலக பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். கடந்த வாரம் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்தார். இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீடு மற்றும் ஸ்டார் லிங் முதலீடு உள்ளிட்ட அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எலான் மஸ்க்கின் இந்த பயணம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவரது இந்திய பயணம் தள்ளிவைக்கப்பட்டது. டெஸ்லா நிறுவனம் தொடர்பாக பல்வேறு பணிகள் இருப்பதாக இந்திய பயணத்தை தள்ளி வைத்த எலான் மஸ்க், அடுத்த வாரமே சீனாவுக்கு பயணம் மெற்கொண்டுள்ளார். தனது சீன பயணத்தில் சீன அதிகாரிகளை சந்தித்து ஆட்டோமேட்டிக் கார்களுக்கான மென்பொருளை சீனாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எலான் மஸ்க் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இவை சிந்திக்க வேண்டிய விஷயம்: இந்த நிலையில் எலாஸ் மஸ்க்கின் இந்திய பயணம் ரத்து தொடர்பாக, தனது எக்ஸ் தள பக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் சந்தேகம் எழுப்பியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “டெஸ்லா கார் கம்பெனியின் அதிபர் எலான் மஸ்க் அவர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு நாள் குறித்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய பிறகு இந்தியாவில் கார் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலையை அமைக்கும் முடிவை எலான் மஸ்க் அறிவிப்பார் என்று அரசு எதிர்பார்த்தது. கடந்த வாரம் தன் இந்தியா பயணத்தை நாள் குறிப்பிடாமல் எலான் மஸ்க் ஒத்திவைத்தார்.
டெஸ்லா கம்பெனியின் “அவசர வேலைகளால்” பயணம் ஒத்தி வைக்கப்பட்டது என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால் நேற்று எலான் மஸ்க் சீனாவிற்குச் சென்றார், சீனப் பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். டெஸ்லா கம்பெனியின் நவீன ஓட்டுனர் இல்லாத காரை சீனாவில் தயாரிப்பது பற்றி இருவரும் பேசினார்கள் என்று அறிவிக்கப்பட்டது. சீனாவில் மிகப் பெரிய கார் தொழிற்சாலையை எலான் மஸ்க் அமைப்பார் என்று நம்பப்படுகிறது.
இந்திய பயணத்தை ஒத்திவைத்து எலான் மஸ்க் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டது எதைக் காட்டுகிறது? பிரதமர் மோடி அவர்களைச் சந்திக்காமல் சீனப் பிரதமரைச் சந்தித்தது எதைக் காட்டுகிறது? இவை சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அல்லவா?” என குறிப்பிட்டுள்ளார் ப.சிதம்பரம்