இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், இன்று நடப்பு நிதியாண்டின் 4-வது நிதிக் கொள்கை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், ”ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும், ரெப்போ விகிதத்தை அதிகரிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர். அதனடிப்படையில், நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. ரெப்போ விகிதம் ஏற்கனவே இருந்ததை போன்று 6.50% ஆக தொடரும்.
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான ‘இஎம்ஐ’ அதிகரிக்காது. வாங்கிய கடனின் இஎம்ஐயில் எவ்வித மாற்றமும் இருக்காது. இதனால் வீடு உள்பட மற்ற கடன் வாங்கியவர்கள் நிம்மதியில் உள்ளனர். கடந்தாண்டு மே மாதம் முதல் ரெப்போ விகிதத்தை 6 முறை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதனால், வீட்டுக்கடன் வாங்கியவர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
ரெப்போ விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஏற்கனவே இருந்த நிலையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் வரை, ரெப்போ விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றும், அடுத்தாண்டு முதல் காலாண்டில் ரெப்போ விகிதம் குறைய வாயப்புள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.