தற்போதைய காலகட்டத்தில் சொந்த வீடு என்பது அனைவரின் கனவு. இதனைப் பூர்த்தி செய்ய அரசு மற்றும் தனியார் வங்கிகள், வருமானம் சார்ந்த வீடு மற்றும் தனிநபர் மற்றும் தொழில் கடன்களை வழங்குவதில் போட்டி போடுகின்றன. வீட்டுக் கடன் வாங்கும்போது அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி தெரியாமலேயே பலர் வாங்குகின்றனர். கடந்தாண்டு மே மாதத்தில் இருந்து ரிசர்வ் வங்கி 5 முறை கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. மொத்தம் 25% உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், வீட்டுக்கடன், தனிநபர் கடன் பெற்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாதாந்திர தவணை (EMI) அடிப்படையில் மாறுபடும் வட்டி விகிதங்களைக் கொண்ட வீட்டுக் கடன்களுக்கு, வட்டி விகிதம் அதிகரிக்கும் போதெல்லாம், மாதாந்திர தவணையும் அதிகரிக்கும். ஆனால், நிலையான வட்டி விகிதம் மாறாமல் இருக்கும். பெரும்பாலும் வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்காமல் மாதத் தவணையை அதிகரித்து, கடன் காலத்தை நீட்டிக்கின்றன.
இந்நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் கடன் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், கடன் தொகைக்கு அபராத வட்டி விதிக்கப்பட்டு, அது வட்டியுடன் சேர்க்கப்படுகிறது. இதனைத் தடுக்க புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. வட்டி அடிக்கடி அதிகரித்து வருவதால், கடன் வாங்குபவர்கள் நிலையான வட்டி விகிதத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். மேலும், இஎம்ஐ அதிகரிப்பு குறித்து வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறிப்பிட்ட வகை கடன்களுக்கான EMI அதிகரிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. புதிய விதிமுறைகளின்படி, வாடிக்கையாளர்கள் வட்டியில் இருந்து நிலையான வட்டி விகிதத்திற்கு மாறும்போது வட்டி விகிதம் மாறும். நிலையான வட்டி விகிதம் பொதுவாக மாறி வட்டி விகிதத்தை விட அரை சதவீதம் அதிகமாக இருக்கும். இதன் மூலம், நிலையான வட்டிக்கு மாறும்போது EMI அதிகரிக்க வாய்ப்புள்ளது.