தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கான ஆணையை பால்வள ஆணையர் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில், மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில் நடைபெற்ற நியமனங்களில் பல்வேறு முறைகேடு நடந்ததாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 201 பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, 2021-22இல் மானியக் கோரிக்கையின் போது, ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர் வரையிலான பதவியிடங்கள், அரசின் ஆணை பெற்று டிஎன்பிஎஸ்சி மூலமாகவே நடத்தப்படும் என்று அமைச்சர் மு. நாசர் அறிவித்தார்.
அதன் அடிப்படையில், ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 காலியிடங்களின் எண்ணிக்கையை பால்வள ஆணையர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பியுள்ளார். விரைவில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதவிகளுக்கான கல்வித் தகுதிகள் உள்ளிட்ட இதர பொது நிபந்தனைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஆணையர் தெரிவித்துள்ளார். எனவே, இந்த பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.