தமிழ்நாடு அரசு மற்றும் ரெனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 3,300 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசிற்கும் ரெனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் இந்த நிறுவனம், தனது முழு உற்பத்தித் திறனான 4.80 இலட்சம் கார்கள் உற்பத்தியில், 2 இலட்சம் கார்கள் அளவிற்குதான் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் விரிவாக்கத்திற்கான பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டு 2025ம் ஆண்டில் தனது மின்சார வாகனத்தை ரெனால்டு நிஸ்ஸான் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், RNAIPL மற்றும் RNTBCI நிறுவனங்கள், வாகன உற்பத்தி தளங்களை நவீன மயமாக்குவதற்கும், புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்தவும் முன்வந்துள்ளன.