முன்னாள் மின்வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி காசி என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் மின்வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி காசி என்பவரின் வீட்டிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2021 – 2023ஆம் ஆண்டுகளில், மின்வாரியத்தில் முக்கிய பொறுப்புகளை காசி கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. மின்வாரியத்தின் ஒப்பந்தம், டெண்டர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த அதிகாரம் காசியிடம் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், 2023 செப். 23 அன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இதையடுத்து, முன்னதாக கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான தகவலின் அடிப்படையில், மீண்டும் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. தற்போது காசி மின்வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.