தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் அமித்ஷா பதிலளித்தார். அப்போது, அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பான சூழல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தென் மாநிலத்தில் ஒரு தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வரும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையே, மார்ச் 25ஆம் தேதி டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கூட்டணி குறித்து பேசவே இல்லை. மக்கள் பிரச்சனைகள், நிதி ஒதுக்கீடு பற்றி மட்டுமே பேசினோம். தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அவரிடம் எடுத்துரைத்தோம். தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். டாஸ்மாக் ஊழல் குறித்து பேசினோம்.
நாடாளுமன்ற மறுசீரமைப்பு குறித்து அமித்ஷாவிடம் எடுத்துரைத்தோம். முழுக்க முழுக்க மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசவே அமித்ஷாவை சந்தித்தோம். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடக்கும். தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே கூட்டணி பற்றி பேச எந்த அவசியமும் இல்லை. கூட்டணி என்பது வேறு; கொள்கை என்பது வேறு. கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப மாறும்” என தெரிவித்திருந்தார்.
ஆனால், அப்போதே எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பிறகு அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “2026இல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்” என்று தெரிவித்தார்.
Read More : ரம்ஜான் பண்டிகைக்கு விடுமுறை கிடையாது..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!! ஊழியர்கள் அதிர்ச்சி..!!