2021- சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.. அதன்படி அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.. இதனிடையே கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன..
ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது.. இந்த நிலையில் இந்த இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவரும், நேற்று முதலமைச்சருமான ஸ்டாலினுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ். அழகிரி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.. இந்த ஆலோசனையின் முடிவில் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.. அதன்படி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது..
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசிய போது “ முதலமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பு சுமூகமாக இருந்தது.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி விரைவில் அறிவிக்கும்..” என்று தெரிவித்தார்.. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும், மூத்த தலைவருமான ஈவிகேஸ் இளங்கோவன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..