ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளராக சிவபிரசாந்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்று இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு (98) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.