பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்க இந்தியாவில் மின்சார வாகன கலாச்சாரத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், எத்தனால் எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் குறித்த எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”விரைவிலேயே நம் நாடு முழுவதும் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். முன்னனி கார் உற்பத்தியாளரான டொயோட்டா நிறுவனம், தன்னுடைய கேம்ரி (Camry) காரை முழுவதும் எத்தனாலில் இயங்கும் வகையில் தயாரித்துள்ளது. இந்தக் கார் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது. இந்த எரிபொருளை பயன்படுத்தி 40 சதவிகித மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்” என கூறினார்.
இதுதவிர, இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களான டிவிஎஸ், பஜாஜ் மற்றும் ஹீரோ போன்ற நிறுவனங்கள் இதில் ஆர்வமாக உள்ளன. 100 சதவிகிதம் எத்தனாலில் இயங்கும் மோட்டார் சைக்கிள்களை விரைவில் இவர்கள் அறிமுகப்படுத்துவார்கள் என கட்கரி கூறினார். மேலும், “பெட்ரோல் விலையுடன் எத்தனால் விலையை ஒப்பிட்டால், உங்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 ரூபாய்க்கு கிடைத்தால் எப்படியிருக்கும். இதன் விலையும் அவ்வுளவு தான் இருக்கும். ஏனென்றால் எத்தனாலின் தற்போதைய விலை ஒரு லிட்டருக்கு 60 ரூபாயாக இருக்கிறது.
அதே சமயத்தில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 120 ரூபாயாக இருக்கிறது. மேலும், எத்தனாலில் இருந்து 40 சதவிகிதம் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். ஆகையால், ஒரு லிட்டர் எத்தனாலின் விலை சராசரியாக 15 ரூபாய் இருக்கக்கூடும்” என கட்கரி கூறினார். மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் தலைவரோடு நடத்திய கலந்துரையாடல் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் நிதின் கட்கரி. மின்சார வாகனங்கள் தயாரிக்க தங்களிடம் எதிர்கால திட்டம் உள்ளதாகவும் இந்தியாவிற்கென்றே தனித்துவமான மின்சார வாகனங்களை எதிர்காலத்தில் சொகுசு கார் உற்பத்தியாளர்கள் தயாரிப்பார்கள் என்றும் மெர்சிடஸ் பென்ஸ் தலைவர் தன்னிடம் கூறினார்” என கட்கரி தெரிவித்தார்.