தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய். இவர், பாக்ஸ் ஆபீஸிலும் பட்டையை கிளப்பி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் நடிகர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பணியாற்றி வருகிறார். நிர்வாகிகள் நியமனம், ஆலோசனைகள், நலத்திட்ட உதவிகள் என பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். மேலும், சிலர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஆட்டோ வழக்கில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “விஜய்யின் பிறந்தநாள் விழா ஜூன் 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்யும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது. எங்கள் தலைவரின் பிறந்தநாளை 365 நாட்களும் கொண்டாடும் கட்சி தவெக. இன்று 14 பேருக்கு ஆட்டோ வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தலா ரூ.35,000 முன்பணமாக செலுத்தி ஆட்டோ வழங்கப்படுகிறது. தினமும் அவர்களின் சொந்த உழைப்பில் தவணையாக கட்டிக் கொள்வார்கள்.
அதேபோல், பல ஆண்டுகளாக தளபதி விலையில்லா விருந்தகம் மூலம் தினந்தோறும் 150 பேருக்கு காலை உணவு வழங்கி வருகிறோம். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை பார்த்தாலே 3 வயது குழந்தைக்கு கூட தெரியும் அது நம் தலைவர் கட்சி தான் என்று. இந்த மாதிரி வேற யாருக்குமே கிடைக்காது. இதெல்லாம் எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம். சாலையில் செல்லும் 5 கார்களில் 3 காரில் ஆவது தவெகவின் கொடி இருக்கும். அந்த அளவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் நேசிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.