மறைந்த பின்னணி பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 77-வது பிறந்தநாள் இன்று.
அரை நூற்றாண்டுக்கு மேலாக சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த இந்த காந்த குரலில் தான் ரசிகர்கள் காதல் நட்பு சோகம் என எல்லா உணர்வுகளையும் உணர்ந்தார்கள். அது SPB எனும் மூன்று மந்திர எழுத்து. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான எம்ஜிஆருக்கு முதல் முதலில் ஒலித்த இந்த குரல் பின்னாட்களில் ஒரு சூப்பர் ஸ்டாரை உருவாக்கியது.
ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்பி பாலசுப்ரமணியம் தெலுங்கு தமிழ் ஹிந்தி மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். எஸ் பி பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனுக்கு சான்று. 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் உலகின் அதிக பாடல்களை பாடிய சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனையையும் வசப்படுத்தியவர்.
டிஎம் சௌந்தர்ராஜன் குரலை ஈடுசெய்ய இனி ஒரு பாடகர் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பது அரிது என்று பேசப்பட்ட காலகட்டத்தில் டிஎம்எஸ் பாடல்களைப் பாடி வாய்ப்புக்காக இசையமைப்பாளர்களின் ஸ்டுடியோ படிகளில் ஏறி இறங்கிய எஸ் பி பாலசுப்பிரமணியம், ஆரம்ப கட்டத்தில் புறக்கணிக்கப்பட்டது அவருடைய மோசமான தமிழ் உச்சரிப்புக்காகத்தான். எம்எஸ் விஸ்வநாதனின் ஆலோசனைக்கு இணங்க ஓராண்டு பயிற்சி பெற்று தமிழ் சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்ற எஸ்பிபி கிடைத்த முதல் வாய்ப்பில் இருந்து கடைசி நாள்வரை 54 ஆண்டுகளாக எல்லா மொழிகளிலும் சரியான உச்சரிப்புடன் பாடிய பாடகர் என்ற சிறப்புடன் விளங்கினார்.
சங்கீதத்தில் கை தேர்ந்த ஞானம் பெற்ற எஸ் பி பாலசுப்ரமணியம், எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண் படத்தில் அவர் பாடிய பாடல் தான் ஆயிரம் நிலவே வா. இந்த பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் எஸ்.பி.பி. கடந்த 1960 களில் தமிழ் திரையுலகில் அறிமுகமான எஸ்.பி.பி தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி பாடகராக இருந்து வந்துள்ளார். பாடகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் தன்னுடைய முத்திரையை தமிழ்சினிமாவின் வலுவாக பதித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு எஸ் பி பாலசுப்ரமணியம் இசையமைத்து நடித்து வெளியான சிகரம் திரைப்படத்தில் நடிப்பு இசை என இரண்டு துறைகளிலுமே தனது புலமையையும், அனுபவத்தையும் வெளிப்படுத்தியிருப்பார் எஸ்பிபி.
1991 ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வந்த படம் தளபதி. இதில் ரஜினி, மம்முட்டி, அரவிந்த்சாமி ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில், “ராக்கம்மா கையத்தட்டு”, “சுந்தரி கண்ணால்” போன்ற பாடல்கள் எஸ்.பி.பி. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1992ம் ஆண்டு திரைக்கு வந்த படம் “ரோஜா”. இதில் அரவிந்த்சாமி, மது பாலா, நாசர் என பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல் தான் ‘காதல் ரோஜாவே’. இப்பாடல் இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
எம்எஸ் விஸ்வநாதன் தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்த காலகட்டத்தில் அறிமுகமான எஸ் பி பாலசுப்ரமணியம் இளையராஜா இசையமைப்பாளராக வலம் வந்த நேரத்தில் உச்சத்தில் இருந்து வந்தார். பின்னர் ஏ.ஆர் ரஹ்மான் தலைமுறையிலும் தன்னை தக்க வைத்துக்கொண்டு அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளரை கடந்தும் தனது தன்னிகரில்லாத கம்பீரக்குரலால் ரசீகர்களை வசீகரித்தார்.
பாடகராக தமிழ் சினிமாவில் உச்சத்தில் வலம் வந்தபோது நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் புதிய முயற்சிகளை முயன்று பார்ப்பதில் எப்பொழுதும் ஆர்வம் காட்டி வந்துள்ளார். மன்றம் வந்த தென்றலுக்கு, சங்கீத மேகம், மண்ணில் இந்த காதலின்றி, காதல் ரோஜாவே, சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என நமது ஆன்மாவையே குளிர்விக்கும் இந்த காந்த குரலில்தான், காதல், சோகம், குதூகலம், கற்பனை, மோகம் என நினைவின் அடுக்குகளில் விரவிக் கிடக்கும் எல்லா உணர்வுகளையும், தருணங்களையும் இசைப்பிரியர்கள் மனதில் புகுத்தியது.
கேளடி கண்மணி திரைப்படத்தில் மண்ணில் இந்த காதலன்றி பாடலையும், அமர்க்களம் திரைப்படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலையும் மூச்சுவிடாமல் பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய எஸ் பி பாலசுப்ரமணியம் தொலைக்காட்சித் தொடர்கள் தமிழகத்தில் அறிமுகமான காலகட்டத்தில் அந்த தொடர்களின் தொடக்கப் பாடலை பாடி இல்லங்கள்தோறும் தனது குரல் தினமும் ஒலிப்பதை உறுதி செய்தார்.
‘போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே’ எனும் வரிகளை ஒலிக்கவிட்டு மேற்கொள்ளும் பயணம்தான் எத்தனை அழகானது, ரம்மியமானது, ரசனையானது. இப்படி தன்னிச்சையாக அனிச்சையாகவோ மனதுக்குள் ஒலிக்கும், முணுமுணுக்கும் பாடல்கள்தான் எத்தனை. அந்த அற்புத குரலின் பெயர்தான் எஸ்பிபி எனும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.தலைமுறை இடைவெளி காணாத ஒரேயொரு பாடகராக தமிழ் திரையுலக வரலாற்றில் எஸ்பிபி விளங்கி நிற்கிறார். 1966 ஆம் ஆண்டு தொடங்கி கலைத்துறையில் மூன்று தலைமுறைகளை கண்டவர், 16 மொழிகளுக்கு மேல் பாடியவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னிலை பாடகராகத் தொடர்ந்து தன் இருப்பைத் தக்க வைத்த ஒரு ஆளுமை. எல்லா மாற்றங்களிலும் எஸ்பிபி தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார்.
1978ம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் சட்டம் என் கையில். படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா என பலர் நடித்துள்ளனர். “சொர்க்கம் மதுவிலே” என்னும் பாடலை எஸ்.பி.பி அவர்கள் பாடியுள்ளார். சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற பாடல் “இளமை இதோ இதோ”, 1998ல் திரைக்கு வந்த படம் தான் “காதல் மன்னன்” படத்தில் இடம்பெற்ற “உன்னை பார்த்த பின்பு நான்”, அதன்பின் வெளியான மின்சார கனவு படத்தின் தங்க தாமரை உள்ளிட்ட பாடங்கள் இளைஞர்கள் மனதில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருந்தது.
பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய இந்திய அரசின் மிக உயரிய விருதுகளை வென்ற எஸ் பி பாலசுப்ரமணியம் தலைமுறைகள் கடந்தும் தன்னை தகவமைத்துக் கொண்டு, இளம் இசையமைப்பாளர்களிடன் நட்புடன் பழகி தனது குரலை ரசிகர்கள் மனதில் தொடர்ந்து பதிய வைத்த வண்ணம் இருந்தார். அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக தமிழ்சினிமாவை ஆக்கிரமித்திருந்த எஸ்பிபியின் காந்தக் குரல் காற்றில் கரைந்தது தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் ஆறாத வடுவாக அப்படியே தங்கி விட்டது. ‘எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே…’ எனும் எஸ்.பி.பி.யின் வரிகள் நிதர்சனமாகியுள்ளது. அவரது பாடல்கள் இன்றும் நம்மை பரவசப்படுத்திக்கொண்டிருக்கிறது; இசை எனும் காற்றில் இரண்டறக்கலந்திருக்கிறது. இசை இருக்கும் வரை அவரது புகழ் இருக்கும்.