அசாம் அரசு குழந்தை திருமணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அச்சம் காரணமாக இளம் கர்ப்பிணிகள் மருத்துவமனைகளுக்கு செல்வதையே தவிர்ப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது..
அசாமில் சராசரியாக 31% குழந்தை திருமணங்கள் நடைபெறுவவதாக கூறப்படுகிறது.. 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அசாம் அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்தது.. அதன்படி, 14-18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த ஆண்கள், போக்சோ சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள். அசாம் மாநிலத்தில் தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் அதிகரித்தும் வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
இதை தொட்ர்ந்து குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கையை அசாம் காவல்துறை தொடங்கியது.. அதன்படி இதுவரை 2,763 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதிகப்பட்சமாக ஹோஜாய் மாவட்டத்தில் 216 பேர் கைது செய்யப்பட்டனர்.. இந்நிலையில் அசாமில் குழந்தை திருமணத்தை கட்டுப்படுத்தும் அச்சம் காரணமாக இளம் கர்ப்பிணிகள் மருத்துவமனைகளுக்கு செல்வதையே தவிர்ப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. தங்கள் பிரசவ தேதி நெருங்கிவிட்டாலும் அப்பெண்கள் மருத்துவமனைகளுக்குச் செல்ல பயப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.. குழந்தை பிறந்தால், மாநில நிர்வாகம் தங்கள் கணவரை கைது செய்யக்கூடும் என்று அவர்கள் பயப்படுவதாகவும் கூறப்படுகிறது..
இதே காரணத்திற்காக இளம் கர்ப்பிணிகள் கருக்கலைப்பு செய்ய உள்ளூர் கிளினிக்குகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது.. குழந்தை பிறந்தால், அது நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், தங்கள் கணவர்கள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்குத் தொடரவோ அல்லது சிறையில் அடைக்கவோ குழந்தையை ஆதாரமாகப் பயன்படுத்துவார்கள் என்று அப்பெண்கள் பயப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது..
சில கர்ப்பிணிகள் ஆஷா சுகாதார பணியாளர்களிடம் கூட அவநம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.. கிராமங்களில் போலீஸ் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து தங்கள் மீது கோபத்துடன் இருப்பதாக ஆஷா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்..
ஆஷா ஊழியர்கள் தான் கிராமங்களில் கர்ப்பம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளை கண்காணித்து அரசுக்கு புள்ளிவிவரங்களை வழங்குகின்றனர்.. இது கிராமப்புறங்களில் உள்ள கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.