நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் தேதி டெல்லியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை வந்துள்ளார். அதன்பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முன்னரே இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நலம் பெறுவார்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். சமீபத்தில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.