தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமானவர் குமரி அனந்தன். இவருக்கு வயது (91). இந்நிலையில், இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் உள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால், வேலூரில் உள்ள நருவி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு அவரை மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தற்போது ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர், கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குமரி அனந்தன், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி ஆவார். முன்னாள் மறைந்த முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர். முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் இந்திய மக்களவை உறுப்பினர், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர், இலக்கியப் பேச்சாற்றல் மிக்க தமிழ் இலக்கியவாதி என்று பன்முகத் திறன் கொண்டவர்.