பேரறிஞர் அண்ணா குறித்து விமர்சித்த கருத்துகளுக்கு அண்ணாமலை பகிரங்க வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய கட்சி அதிமுக. ஆனால், தமிழ்நாட்டில் அதிமுகவை ஓரம்கட்டிவிட்டு பாஜக எப்போதும் செயல்பட்டு வருகிறது. அதிமுகவின் தலைவர்களை விமர்சனம் செய்வதை பாஜகவினர் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
ஜெயலலிதாவை ஊழல் பேர்வழி என அண்ணாமலை விமர்சிக்கப் போய் ஒட்டுமொத்த அதிமுக தலைவர்களும் வரிந்து கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணியே பெரும் கேள்விக்குறியானது. ஒருவழியாக டெல்லி தயவால் இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. தற்போது பேரறிஞர் அண்ணாவை விமர்சித்து தமிழ்நாடு பாஜக அண்ணாமலை அடுத்த பஞ்சாயத்துக்கு வழிவகுத்துள்ளார்.
அண்ணாமலை தமது பாதயாத்திரையின் போது பேசுகையில், பேரறிஞர் அண்ணாவை ஒருமையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விமர்சித்தார் என்றெல்லாம் அண்ணாமலை கூறியிருந்தார். கடந்த சில நாட்களாக அதிமுக இது பற்றி அமைதி காத்து வந்தது. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றுதான் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அதிமுக- பாஜக இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அண்ணாமலையின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் பேசுகையில், ”நடக்காத ஒரு விஷயத்தை பற்றி அண்ணாமலை பேசுகிறார். பாஜகவை வளர்ப்பதற்காக உண்மைக்கு மாறான தகவல்களையும் மறைந்த தலைவர்களைப் பற்றியும் விமர்சிக்கக் கூடாது. ஏற்கனவே ஜெயலலிதா குறித்து இப்படி பேசித்தான் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார்.
பேரறிஞர் அண்ணா மிகவும் உன்னதான ஒரு தலைவர். அவரைப் பற்றி நடக்காத விஷயமாக, பசும் பொன் முத்துராமலிங்க தேவருடன் மோதல் ஏற்பட்டது என்கிறார். இது அதிமுக தொண்டர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியதற்காக தீர்மானமே நிறைவேற்றினோம். அண்ணாவைப் பற்றி இழிவாக பேசுவதைப் பார்த்துக் கொண்டு அதிமுக தொண்டன் சும்மா இருக்கமாட்டான். ஆகையால், அண்ணாமலை தமது பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று ஜெயக்குமார் கூறினார்.