முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33வது முறையாக நீட்டிக்கட்டுள்ளது. காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில்பாலாஜியின் காவலை ஏப்ரில் 22ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார், அதன் பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, நீதிமன்ற காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார். பலமுறை அவருக்கு காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார். ஆனால், செந்திபாலாஜி தரப்பிலிருந்து அதே நாளில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவில், மறுபடியும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என இன்னொரு புதிய மனுவை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
செந்தில் பாலாஜியின் மனுவில், வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அதனால், அமலாக்கத் துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீது மறுபடியும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும்… அப்படி வாதிட அனுமதிக்க முடியவில்லையென்றால், தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம் அமலக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.. மேலும் செந்தில்பாலாஜியின் நீதிமன்றம் காவலை ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அதன்படி காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில்பாலாஜியின் காவலை ஏப்ரில் 22ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.