முன்னாள் அமைச்சர்கள் என்னை படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் என்றும் எனது சுயசரிதையின் 2ஆம் பாகம், கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் சொப்னா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா சமீபத்தில் ‘சதியின் பத்ம வியூகம்’ என்ற பெயரில் ஒரு சுயசரிதை எழுதினார். அதில், கேரள முதல்வர் பினராய் விஜயன், அவரது குடும்பத்தினர், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், சில முக்கிய நபர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்தப் புத்தகம் வெளியான 2 நாட்களிலேயே அச்சிடப்பட்ட 5,000 பிரதிகளும் விற்று தீர்ந்தன.

இந்நிலையில், ஒரு மலையாள தொலைக்காட்சிக்கு சொப்னா அளித்த பேட்டியில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான கடகம்பள்ளி சுரேந்திரன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் என்னை பலமுறை படுக்கைக்கு அழைத்துள்ளனர். கடகம்பள்ளி சுரேந்திரன் பலமுறை என்னிடம் செல்போனில் ஆபாசமாக பேசியும், என்னிடம் நேரில் ஆபாசமாக நடந்து கொள்ளவும் செய்துள்ளார். என்னுடைய வீட்டுக்கு வருவதாகவும், ஓட்டலில் அறை எடுக்கலாம் என்றும் என்னிடம் பலமுறை கூறினார். நான் சொல்வது பொய்யாக இருந்தால் கடகம்பள்ளி சுரேந்திரன் என் மீது வழக்கு தொடரட்டும்.

இதேபோல, முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் என்னை மூணாறுக்கு வருமாறு கட்டாயப்படுத்தினார். முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் என்னை பலமுறை அவரது வீட்டுக்கு தனியாக வருமாறு அழைத்துள்ளார். என்னுடைய சுயசரிதையின் 2-வது பாகத்தை நான் எழுத தொடங்கி உள்ளேன். அந்தப் புத்தகத்தில் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தப் போகும் பல நியூக்ளியர் அணுகுண்டுகள் இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.