தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் க. அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ”4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கான மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புகள் போன்றவைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட இருக்கிறது. இந்த வினாத்தாள்களை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வினாத்தாள்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஏப்ரல் 13 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் வழங்கப்பட இருக்கிறது. இந்த பிரிண்டர்கள் முதல் கட்டமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சென்னை, திருச்சி, சேலம், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய பள்ளிகளில் வழங்கப்பட இருக்கிறது. இந்த பிரிண்டர்கள் மூலம் வினாத்தாள்களை பிரதி எடுத்து உரிய முறையில் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.