ஆன்லைன் தேர்வுகளில் 90% மதிப்பெண் பெற்ற 1,700 கல்லூரி மாணவர்கள் வகுப்பறையில் நேரடியாக எழுதிய செமஸ்டர் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண்கள் எடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள பண்டிட் ரவி சங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தில் பருவத்தேர்வுகள் நடைபெற்று முடிந்தன. இந்த தேர்வை 1.5 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில், 1,700 மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில் பூஜ்யம் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இந்த 1,700 மாணவர்களும் கொரோனா காலகட்டத்தில் நடந்து வந்த ஆன்லைன் தேர்வில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஆனால், நேரடி தேர்வில் குறிப்பிட்ட சில பாடங்களில் ஒரு மதிப்பெண் கூட பெறவில்லை.
சுமார் 60 ஆண்டுகளாக ரவி சங்கர் சுக்லா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழக வரலாற்றில் மிக மோசமான தேர்வு முடிவுகளாக இது அமைந்துள்ளதாக நிர்வாகம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் கல்வியின் தரம் எவ்வளவு மோசமானதாக இருந்தது என்பதற்கு இந்த மதிப்பெண்களே உதாரணம் என கல்வியாளர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
மேலும், தாவரவியல் பாட கேள்வி தாளில் தேயிலையின் அறிவியல் பெயர் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மாணவன், 3 வகையான தேயிலை இருப்பதாகவும் அவை பால் டீ, க்ரீன் டீ மற்றும் பிளாக் டீ என எழுதி வைத்துள்ளார். மேலும், பிகாம் மாணவர் ஒருவர் தனக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண்களை வழங்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளார். மாணவர்களின் இந்த செயல்பாடுகள் நகைச்சுவையாக தெரிந்தாலும், இது அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.