தமிழகத்தில் 3, 6, 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிட ‘எஸ்இஏஎஸ்’ தேர்வு மாநிலம் முழுவதும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 3, 6 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் நியமிக்கப்படுவார்கள்.
இதுதவிர 29,775 கள ஆய்வாளர்களை அடையாளம் கண்டு அவர்கள் மூலம் இந்த மாநில கல்வி சாதனை ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய கள ஆய்வாளர்கள், மாவட்ட ஆசிரியர் கல்விமற்றும் பயிற்சி நிறுவன பயிற்சியாளர்கள், பி.எட், எம்.எட் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு இந்த ஆய்வுக்கான பயிற்சி தரப்படும்.
அதேபோல், வட்டார அளவிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் மொத்தம்1,356 பேர் வட்டார ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.