சேலம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு வருகின்ற 4-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், வெளியிட்ட செய்தி குறிப்பில் சேலம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 49 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்களை கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகின்ற 04.12.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண் , மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் அனுமதிச் சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியான https:agaram.tn gov.inonlineforms/formpage_open.php?id=43-174 என்ற (இணைய தளத்தினுள் சென்று பதிவு எண்ணினையும், கைப்பேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் தேர்வு அனுமதிச் சீட்டு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.