LSG-DC: ஐபிஎல் தொடரின் 4-வது லீக் போட்டியில் அசுதோஷின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தில் டெல்லி கேப்பிடல்ஸ் த்ரில் வெற்றிபெற்றது.
விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற 4வது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து வீச முடிவு செய்தார். அதன்படி, லக்னோ அணிக்காக எய்டான் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். ஆரம்பம் முதலே மார்ஷ் அதிரடியாக ஆடினார். மார்க்ரம் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 36 பந்துகளில் 72 ரன்களை விளாசினார் மார்ஷ். 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். பேட்டிங் ஆர்டரில் மூன்றாவது பேட்ஸ்மேனாக நிக்கோலஸ் பூரன் களம்கண்டார்.
அவரும் அதிரடியாக ஆடினார். 30 பந்துகளில் 75 ரன்களை அவர் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில் 6 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார் லக்னோ கேப்டன் ரிஷப் பந்த். ஆயுஷ் பதோனி 4, ஷர்துல் தாக்குர் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 117 ரன்களை எடுத்திருந்தது லக்னோ. அடுத்த 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை லக்னோ இழந்தது.
19-வது ஓவரில் ஷாபாஸ் அகமது 9 ரன்களில் அவுட் ஆனார். ஸ்டார்க் பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் ரவி பிஷ்னாய் போல்ட் ஆனார். மோஹித் சர்மா வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தது லக்னோ அணி. அந்த ஓவரில் டேவிட் மில்லர் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது லக்னோ. இந்தப் போட்டியில் வெற்றி பெற டெல்லிக்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
இதனையடுத்து 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே ஜேக் பிரெசர் மெக்கர்க், அபிஷேக் போரல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் இரட்டை செக் வைத்தார். அடுத்து வந்த சமீர் ரிஸ்வியும் நிலைக்கவில்லை 4 ரன்களில் நடையை கட்டினார். விக்கெட்டுகள் இழந்தாலும் டெல்லி அணி ஆரம்பம் முதலே அதிரடியாகவே விளையாடியது. இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.
ஸ்டப்ஸ் 34 ரன்கள் (22 பந்துகள்), விப்ராஜ் நிகாம் 39 ரன்கள் (15 பந்துகள்) என விரைவாக அடிக்க ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. இவர்கள் ஆட்டமிழந்தாலும் அசுதோஷ் சர்மா நிலைத்து விளையாடி டெல்லி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 1 விக்கெட் மட்டுமே இருந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதில் முதல் 2 பந்துகளில் மொகித் சர்மா 1 ரன் அடிக்க, 3-வது பந்தில் சிக்சர் அடித்து அசுதோஷ் சர்மா ஆட்டத்தை முடித்து வைத்தார்.
19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 211 ரன்கள் அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த அசுதோஷ் சர்மா 66 ரன்களுடன் களத்தில் இருந்தார். லக்னோ தரப்பில் ஷர்துல் தாகூர், சித்தார்த், திக்வேஷ் ரதி மற்றும் பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
Readmore: ஜன.,9ல் ரிலீசாகிறது ஜனநாயகன்.. தரமான சம்பவம் வெயிட்டிங்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!!