இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கான முதலாவது டி20 போட்டி, கடந்த 27ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, இந்தப் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், இரண்டாவது போட்டி, நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள், இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முயலாமல் சீட்டுக்கட்டுப்போல் சரிந்தனர். இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க பேட்டர்களும் விரைவிலேயே நடையைக் கட்டினர். சுப்மன் கில் 11 ரன்னிலும், இஷான் கிஷன் 19 ரன்னிலும், ராகுல் திரிபாதி 13 ரன்னிலும் நடையைக் கட்டினர். வாஷிங்டன் சுந்தர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆக, துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புணர்ந்து விளையாடினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் ஒன்று, இரண்டு ரன்களாகவே எடுத்தனர். நிறைய டாட் பந்துகள் ஆகிக் கொண்டே இருந்தன. அதனால், ஆட்டத்தில் இந்திய அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலையால் ஆட்டத்தில் பரபரப்பு மேலும் கூடியது.
கடைசி ஓவரிலும் விரைவாக ரன் எடுக்கப்படவில்லை. கடைசி இரண்டு பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில், சூர்ய குமார் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 19.5 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 26 (31) ரன்களும், ஹர்திக் பாண்டியா 15 (20) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.