மேற்கு ஆசிய நாடான ஈரான், பாரம்பரிய வரலாற்று பெருமை கொண்ட நாடு. அதோடு இப்போதும் பழமையான கடுமையான சட்டங்களை பின்பற்றி வருகிறது. அந்நாட்டில் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. சமீப காலமாக ஈரானில் மரண தண்டனைகள் விதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த 10 நாட்களில் மட்டும் ஈரானில் 42 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தகவலை அந்நாட்டைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 10 நாட்களில் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருவர் தூக்கிலிடப்பட்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இப்படி தூக்கிலிடப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பலுச் பகுதியைச் சேர்ந்த சிறுபான்மையினர் என்று கூறப்படுகிறது. அதே போல் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார். இதற்கு சுவீடன் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான் அரசின் இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும், ஈரான் அரசு தூக்கு தண்டனைகள் வழங்குவதை நிறுத்தவில்லை. அந்நாட்டில் இந்த ஆண்டில் மட்டும் 194 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் இந்த நாட்டில் 82 கைதிகளை தூக்கிலிட்டுள்ளனர் என்று ஐ.எச்.ஆர் அமைப்பு கூறியுள்ளது. அதேபோல், கடந்த 2021ஆம் ஆண்டில் 333 கைதிகளை தூக்கிலிட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.