அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2021-22ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முடிவுகளை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், மொத்தம் 92.71 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவனந்தபுரம் முதல் இடத்தையும், பெங்களூரு 2ஆம் இடத்தையும், சென்னை 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. சிபிஎஸ்இ முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து அடுத்த 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த அறிவிப்பு பொறியியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கடந்த 8ஆம் தேதி தெரிவித்திருந்தார். மேலும், இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அரசு கலை-அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் வரும் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.