நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி உண்டா என்பது குறித்து நாளை அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக உடனான தனது உறவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக முறித்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தாங்கள் வெளியேறி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அதிமுக அறிவித்துவிட்டது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள தினகரன், சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டவர்களுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு நாளை பதில் அளிப்பதாக அவர் தெரிவித்தார். நீங்கள் பாஜக கூட்டணியில் இருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கும் நாளை பதில் அளிப்பதாக அவர் கூறினார்.
டெல்லி மேலிடத்தில் இருந்து அவருக்கு உரிய சிக்னல் எதுவும் இன்னும் தரப்படாததால் இது குறித்து அவரால் உறுதியாக எதையும் கூற முடியவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தனது நிலைப்பாடு குறித்து அவர் நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.