நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கபில்வாசன்(32) இவரது மனைவி ராஜாமணி (24) இந்த தம்பதியினருக்கு நவியா ஸ்ரீ (5)என்ற பெண் குழந்தையும், தருண்(3) என்ற ஆண் குழந்தையும் உள்ளது. கபில்வாசன் அதே பகுதியில் உள்ள சேகோ ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த உறவினர் பாலமுருகன் என்பவரது மகன் ராகுல்(23). நேற்றைய தினம் ராகுல், கபில் வாசன் வீட்டிற்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
ராஜாமணி தண்ணீர் எடுப்பதற்காக சமையலறைக்கு சென்றபோது திடீரென எதிர்பாராத விதமாக தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தருண் கழுத்தில் வாலிபர் ராகுல் காலால் மிதித்து மற்றும் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. தாயார் ராஜாமணி கூச்சலிடவே அருகில் இருந்த உறவினர்கள் குழந்தை தருனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் ராகுலை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ராகுலிடம் நடந்த விசாரணையில் அவர் தெரிவித்து “தொடர்ந்து ஆபாச படங்களை பார்ப்பதாகவும் அதனை உறவினர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
உறவினர்கள் தொடர்ந்து கண்டித்ததால் ஆத்திரமடைந்த ராகுல் தனது சித்தி மகன் தருனை காலால் மிதித்து கொலை செய்ததாக” காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மூன்று வயது குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.