பொதுவாக சமூக வலைதளங்கள் மூலமாக, பல்வேறு வதந்திகள் அவ்வப்போது பரப்பப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். அப்படி பரப்பப்படும் வதந்திகளை நம்பி, பொதுமக்கள் அவ்வப்போது ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது உண்மையா? அல்லது வெறும் வதந்தியா? என்று அறிந்து கொள்ளும் அளவிற்கு இன்னமும் பொதுமக்களிடையே சரியான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் இருக்கின்ற சூரத் நகரத்திற்கு அருகே வரச்சா என்ற பகுதியில், வைர வியாபாரி ஒருவருடைய, பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரக் கற்கள் சாலையில் சிதறி கிடப்பதாக ஒரு வதந்தியான செய்தி பரவியது.
ஆனால், இது உண்மையா பொய்யா என்று சற்றும் யோசிக்காத அந்த பகுதி மக்கள், அந்த வைரக் கற்கள் சிதறி கிடப்பதாக தெரிவிக்கப்பட்ட பகுதியில், ஒன்றுகூடி தொடங்கினர். அதோடு மட்டுமல்லாமல், அந்தப் பகுதியில் வைரக் கற்கள் கிடக்கிறதா? என்று பொதுமக்கள் மிகத் தீவிரமாக தேடி அங்கும், இங்கும் திரிந்தனர். சிலர் ஊர்ந்து சென்று, வைரக்கற்களை தேடி பார்த்தனர்.
அதன் பின்னரும் கூட மக்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. ஆனாலும், மக்கள் ஊர்ந்து சென்று, வைரக்கற்களை தேடினர். ஆனால் அவர்களின் கைகளில் கிடைத்தது சேலை மற்றும் கவரிங் நகைகளுக்கு பயன்படுத்தப்படும் அமெரிக்க வைரம் என்று சொல்லப்படும் மிகவும் விலை குறைவான கற்கள் தான் என்று தெரிய வந்தது.
அதன் பின்னர் இந்த வதந்தியை நம்பி, வைரக்கற்களை தேடி அலைந்த மக்கள், ஒரு கட்டத்திற்கு மேல் சோர்வடைந்து, வெறுப்படைய தொடங்கிவிட்டனர். எவ்வளவு தேடியும், வைரக்கல் கிடைக்காமல் போனதால், அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும்தான்.