கால்வாய் கட்டாமலேயே அந்த இடத்தில் ரூ.9.9 லட்சத்துக்கு கால்வாய் கட்டியுள்ளதாக பொய் கணக்கு காட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக அரசுர வேகத்தில் வளர்ந்து வரும் ஒரு மாநகரம் வேலூர் மாநகரம். மாநகராட்சியில் அனைத்து துறைகளிலும் அலட்சியம் காட்டப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சாலைகள் பணியில் வாகனங்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை சேர்த்து சாலை போட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடிகுழாயை அகற்றாமல் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது. அடுத்தடுத்து இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மக்கள் புகார் மனு அளித்தனர் அதில், ’’ நாங்கள் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்குள்பட்ட கல்புதூர் ராஜீவ் காந்தி நகர் மூன்றாவது மெயின் சாலையில் வசித்து வருகின்றோம். எங்கள் பகுதியில் கழிவு நீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக மனுக்களை கொடுத்து வருகின்றோம். இந்நிலையில் கடந்த 2019-ல் கால்வாய் கட்டுவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டது. விரைவில் பணிகள் தொடங்கும் என மாநகராட்சி தெரிவித்தது.
இன்னும் பணிகள் தொடங்கப்படாத நிலையில் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் எங்கள் பகுதியில் பணிகள் முடிந்த தேதி பற்றி அந்து கொண்டோம். ஆகஸ்ட் 1ல் விண்ணப்பித்தோம். செப்டம்பர் 1ல் பதில் மனு அளிக்கப்பட்டது. ரூ.9.9 லட்சம் செலவில் 2019ல் கட்டி முடிக்கப்பட்டுள்ள என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாத கால்வாய்க்கு பொய் கணக்கு எழுதியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனேவே சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.மேலும் கால்வாயை கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.