கரூர் மாவட்டம் ஈசநத்தம் அருகேயுள்ள அம்மாபட்டியில், 25 வயதான நந்தகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனது வீட்டின் அருகே வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவரது காதலை அந்தப் பெண் ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நந்தகோபால், மாணவியை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
அதன் படி, அவர் தாந்தோணிமலை பொன்நகரில், பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்ற மாணவியை பின்தொடர்ந்துள்ளார். இதையடுத்து, நந்தகோபால், அவரது தாய் கலா மற்றும் நண்பர்களின் உதவியுடன் மாணவியை மினி வேனில் கடத்தி சென்றுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார், உடனடியாக வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து, டிஎஸ்பிக்கள் செல்வராஜ், முத்துகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமிரா காட்சிகள், செல்போன் எண்களை ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கோடங்கிபட்டியில் உள்ள நந்தகோபால் பாட்டி பொன்னம்மாள் வீட்டில் இருந்து போலீசார் மாணவியை மீட்டனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நந்தகோபால் மாணவியின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டும் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்பதால், மாணவியை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, நந்தகோபால், அவர் தாய் கலா, நண்பர்கள் கருப்புசாமி(28), பழனிச்சாமி(42), சரவணன்(26) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், மீட்கப்பட்ட மாணவி அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Read more: செம குட் நியூஸ்..!! செல்போன், டிவிக்களின் விலை அதிரடியாக குறைகிறது..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!