பிரபல கன்னட நடிகர் நிதின் கோபி மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 39. பெங்களூருவில் உள்ள இட்டமடுவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் நிதின் வசித்து வந்தார் . இவருக்கு திருமணமாகாத நிலையில் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் நிதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது, நிதின் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
பிரபல புல்லாங்குழல் வாசிப்பாளரான கோபியின் மகனான நிதின் ஹலோ டாடி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கெரளித கேசரி, முத்தினந்தஹ ஹெண்டதி, நிஷ்யப்தா, சிரபாந்தவ்யா உட்பட 30 கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். நிதின் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் நிதினின் திடீர் மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 39 வயதில் நடிகர் நிதின் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.