நடிகையும் முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நடிகை ஜெயப்பிரதா, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பின்னர் இந்தி திரையுலகிலும் கொடி கட்டிப் பறந்தார். கடந்த 1994ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் ஜெயப்பிரதா. இவரது அரசியல் பயணம் தெலுங்குதேசம் கட்சியில் தொடங்கி உ.பியின் சமாஜ்வாதி கட்சி வரை நீடித்தது.
கடந்த 2004ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையே இவர், சென்னையில் புகழ்பெற்ற ஜெயபிரதா உள்ளிட்ட 2 தியேட்டர்களை நடத்தி வந்தார். இந்த தியேட்டர்களுக்கு முறையாக சொத்துவரி செலுத்தாததால், ஏற்கனவே திரையரங்கு பொருட்கள் அனைத்து ஜப்தி செய்யப்பட்டன.
இதேபோல், திரையரங்கு ஊழியர்களிடம் இஎஸ்ஐ செலுத்துவதற்கான பணத்தை ஜெயப்பிரதாவின் தியேட்டர் நிர்வாகம் பிடித்தம் செய்திருக்கிறது. ஆனால், இந்த பணத்தை முறையாக அரசு தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தில் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஜெயப்பிரதா மீது அரசு தொழிலாளர் காப்பீட்டு கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்தான் தற்போது அவருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.