செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ் திரையுலகில் ’ஆனந்தம்’ என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் இயக்குநராக களமிறங்கியவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் வெளியான சண்டைக்கோழி இன்றளவும் பலருக்கும் பிடித்தமான திரைப்படம். ஆனால், அடுத்தடுத்த படங்கள் லிங்குசாமிக்கு கைகொடுக்கவில்லை. சூர்யா நடிப்பில் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சான் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் அடிவாங்கியது. அதேபோல் சண்டைக்கோழி 2 திரைப்படமும் லிங்குசாமிக்கு சறுக்கியது. அதன்பின்னர் லிங்குசாமி சிறிது கேப் விட்ட நிலையில், வெற்றிப்படம் ஒன்றை கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார்.
பின்னர், தி வாரியர் படத்தை அவர் இயக்கினார். தெலுங்கின் ராம் பொத்தனேனி, கிருத்தி ஷெட்டி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாகி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் எண்ணி ஏழு நாள் என்ற படத்திற்காக பெற்ற கடனை இயக்குனர் லிங்குசாமி திரும்ப செலுத்தவில்லை எனக்கூறி பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.1.03 கோடி கடனுக்காக அவர் வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பியதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பில், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.