சென்னை ஆழ்வார்ப்பேட்டை அபிராமபுரம் 3-வது தெரு பகுதியில் வசித்து வருகிறார் பாடகர் விஜய் யேசுதாஸ். இவர் “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்”, மலரே போன்ற பல பாடல்களை பாடி பிரபலம் பெற்றவர். மாரி படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். பிரபல மூத்த திரைப்பட பாடகர் யேசுதாஸின் மகன் ஆவார். இந்நிலையில், விஜய் யேசுதாஸின் மனைவி தர்சனா வீட்டில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் காணவில்லை என அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி லாக்கரில் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் இருந்ததாகவும், கடந்த மாதம் 18ஆம் தேதி நகைகளை எடுக்க சென்ற போது லாக்கரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார்.
காணாமல் போன நகைகள் குறித்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், வீட்டில் வேலை செய்யும் மேனகா, பெருமாள், சையத் ஆகியோர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறி பாடகர் விஜய்யின் மனைவி தர்ஷனா புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் சந்தேகம் உள்ளதாக கூறப்பட்ட பணியாளர்களை அழைத்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.