தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்தாண்டை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழையின் அளவு வெகுவாக குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பரவலான இடங்களில் வெயில் அதிகம் இல்லையென்றாலும் கூட மழை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பொழியவில்லை. இதனால், விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆனால், கடந்த இரண்டு மூன்று தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சேலம், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருச்சி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுமட்டுமின்றி, இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது.