இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் 3 தவணைகளாக ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் இரண்டு ஹேக்டருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் இணைந்து கொள்ள முடியும். இத்திட்டத்தில் இணைவதற்கான வயது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். இதில் இணைந்த பிறகு விவசாயிகள் 60 வயது வரை மாதம் ரூ.55 முதல் ரூ.200 ரூபாய் வரை முதலீடு செய்து வந்தால் 60 வயதிற்கு பிறகு மாத ஓய்வூதியமாக ரூ. 3000 கிடைக்கும். ஒருவேளை விவசாயி உயிரிழந்து விட்டால் ஓய்வூதியம் அவரின் மனைவிக்கு 50 சதவீதம் ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக பெற உரிமை உண்டு.