புதுக்கோட்டை மாவட்டத்தில் உழவர் கடன் அட்டை திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயிர்க் கடன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையால் (Ghar Ghar KCC Abhiyan – Door to door KCC Campaign என்கிற சிறப்பு முகாம் நாடு முழுவதும் 01.10.2023 முதல் 31.12.2023 வரை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை உழவர் கடன் அட்டை பெறாத விவசாயிகள் இந்த முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். உழவர் அட்டை மூலம் கடன் பெறும் விவசாயிகளிடம் 7% வட்டி வசூலிக்கப்படும். மேலும், இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தவணை மாறாமல் திரும்பச் செலுத்தினால் 3% வரை வட்டி மானியம் பெறலாம்.
உழவர் கடன் அட்டைத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் வரை எவ்விதப் பிணையமும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. உழவர் கடன் அட்டை மூலம் கடன் பெறுவதற்கு விவசாயிகள் தங்களின் நில ஆவணங்கள் (பட்டா/சிட்டா, அடங்கல்) ஆதார் அட்டை (கட்டாயம்), பான் அட்டை, குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கிக் கிளைகளிலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரின் கடன் மனுக்கள் தகுதியின் அடிப்படையிலும், PMFBY வலைத்தளத்திலுள்ள விவசாயிகளின் விவரம், வங்கிகளின் சட்ட திட்டங்கள் ஆகியவற்றிற்கு உட்பட்டும் நிலம், பயிரீட்டு அளவு ஆகியவற்றைப் பொறுத்தும் கடன் வழங்கப்படும். கடன் பெறுவதற்கான விண்ணப்பம் KCC வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து, விவசாயிகளின் பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பத்தினை அதன் இணை ஆவணங்களுடன், நேரடியாக வங்கிக் கிளைகளில் சம்பந்தப்பட்ட வங்கி வணிகத் தொழிளார்கள் மூலமாகவோ, மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலகம், தோட்டக்கலைத்துறை அலுவலம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் இவற்றில் ஏதேனும் ஒன்றிலோ சமர்ப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.