விவசாயம் செய்து வரும் பெண்களுக்கு நற்செய்தி ஒன்றை மத்திய அரசு விரைவில் அறிவிக்கவுள்ளது. நாடு முழுவதும் உள்ள 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கி வரும் மத்திய அரசு, அதில் பெண் விவசாயிகளுக்கு இரட்டிப்பாக ரூ.12,000 வழங்கவுள்ளது. இது தொடர்பாக பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் முன்மொழிவுகள் செய்யப்படும் என தெரிகிறது.
ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர், டிசம்பர்-மார்ச் மாதங்களில் மத்திய அரசின் இந்த நிதியுதவி நேரடியாக விவசாயிகளின் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. சமீபத்தில் பிரதம மந்திரி கிசான் 15-வது தவணை விவசாயிகளின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயம் செய்யும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கான உதவித் தொகையை இரட்டித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் கிசான் உதவித் தொகை திட்டத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரமாக வழங்கப்படும் இந்த நிதித் தொகை மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று மேலும் சில முக்கிய அறிவிப்புகளை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.