சொந்த மருமகளையே மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் 70 வயது முதியவர் ஒருவர் தனது 28 வயது மருமகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் டிரெண்டான நிலையில், அது தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. அங்கு பர்ஹல்கஞ்ச் மாவட்டம் சாபியா உம்ராவ் கிராமத்தைச் சேர்ந்த கைலாஷ் யாதவ் (70). இவர் தனது சொந்த மகனை திருமணம் செய்து கொண்ட மனைவி பூஜாவை (28) திருமணம் செய்து கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கைலாஷ் யாதவ் தனது மருமகள் பூஜாவுடன் அங்குள்ள கோயிலுக்கு வந்துள்ளார். தன்னை விட 42 வயது இளையவரான பூஜாவை அவர் திருமணம் செய்துள்ளார்.
சாபியா கிராமத்தைச் சேர்ந்த கைலாஷ் யாதவ், பர்ஹல்கஞ்ச் காவல் நிலையத்தில் காவலராக உள்ளார். இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கைலாஷுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் இருந்தனர். அதில் 3-வது மகனின் மனைவி தான் பூஜா. இவரது கணவரும் சமீபத்தில் உயிரிழந்துவிட்டார். கணவரின் மரணத்திற்குப் பிறகு பூஜா வேறொரு இடத்திற்குச் செல்ல முடிவு செய்தார். ஆனால், மருமகள் பூஜா மீது கைலாஷுக்கு காதல் மலர்ந்துள்ளது. கைலாஷ் தனது காதலை மருமகள் பூஜாவிடம் சொல்லவே அவரும் இதை ஏற்றுக் கொள்ள இருவருக்கும் இடையே திருமணம் நடந்துள்ளது. வயது வித்தியாசம், சமுதாயத் தடைகளைத் தகர்த்தெறிந்து இருவரும் கோயிலுக்குச் சென்று தங்களுக்குள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்யப்பட்டு, தேவையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் அந்த முதியவருக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.