போர்ச்சுகலில் 10 மாதக் குழந்தையை தனது தந்தை காரிலேயே சுமார் 7 மணி நேரம் விட்டுச் சென்றதால், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியின் வெப்பநிலை சுமார் 26 டிகிரி செல்சியஸ் ஆக இருந்துள்ளது. அதாவது, பூட்டிய காருக்குள் வெப்பநிலை இருமடங்காக இருந்துள்ளது. அறிக்கைகளின்படி, அந்த நபர் வேலைக்குச் செல்வதற்கு முன் தனது மகளை நர்சரியில் இறக்கிவிட வேண்டும். ஆனால், அவர் தனது மகளை காரில் அழைத்துக் கொண்டு நேரடியாக தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
விரிவுரையாளராக இருக்கும் தந்தை, செப்.12ஆம் தேதி நோவா பல்கலைக்கழக வளாகக் கிணறுக்கு அருகில் தனது காரை நிறுத்திவிட்டு தனது அலுவலகத்திற்குச் சென்றார். திரும்பி வந்த அவர், காரின் பின் இருக்கையில் தன் மகள் சுயநினைவின்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவர் அவசர சேவையை அழைத்துள்ளார்.
உடனே அங்கு விரைந்து வந்த அவர்கள், குழந்தையை உயிர்ப்பிக்க முயன்றனர். ஆனால், அந்த குழந்தை இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சிறுமியின் தாயாருக்கு உளவியல் உதவி வழங்கப்பட்டது. மேலும், குழந்தை காரில் இருந்ததை அவரது தந்தை வெறுமனே மறந்துவிட்டார். தகவலின்படி, பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.