ராணிபேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த மேல்வேலம் கிராமம் பஜனை கோவில் தெரிவைச் சேர்ந்தவர் 50 வயதான கோபி. கட்டிட மேஸ்திரியான இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், 26 வயதான யுவராஜ் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக, கோபி சரியாக வேலைக்கு செல்லாமல், அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், அவரது மனைவி வேலைக்கு செல்லுமாறு கோபியிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபி மஞ்சுளாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில், கோபி மஞ்சுளாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த யுவராஜ், தந்தை கோபியை தடுக்க முயன்றுள்ளார். அப்போது கோபி, நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். தனது தாயை தாக்கிய ஆத்திரத்தில் இருந்த யுவராஜ், தனது பக்கத்தில் இருந்த கல்லை எடுத்து கோபியின் தலையில் போட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்த கோபியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் கோபியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, யுவராஜை ராணிப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆத்திரத்தில், மகனே தனது தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.