புதுச்சேரி அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் துரைராஜ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதில், பரிமளம் 18 வயது மகன் ஹேமச்சந்திரன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலையில் ஹேமச்சந்திரன் அறையில் பரிமளம் சென்று பார்த்தபோது, அவன் தூக்கிட்டு சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஹேமச்சந்திரன் எழுதிய கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில், எனது அம்மாவை யாரும் குறை சொல்ல வேண்டாம். இது என்னுடைய முடிவு என எழுதப்பட்டிருந்தது. ஆகையால் நீட் தேர்வை எழுதுவதற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹேமச்சந்திரன் கடந்த 3 வருடங்களாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளர. ஏற்கனவே 2 முறை குறைவான மார்க்குகள் வாங்கியிருந்த நிலையில், இந்த வருடமும் நீட் தேர்வு எழுத இருந்தார். இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற வேண்டும். அதை கொண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என அவரது தாய் மற்றும் உறவினர்கள் கூறிவந்த நிலையில், தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சம் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிகிறது.