ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய திட்டத்தின் கீழ், மூன்று புதிய உரவகைகள் உட்பட பாஸ்பேட், பொட்டாஷியத்திற்கு 2024 காரிஃப் பருவத்திற்கான (01.04.2024 முதல் 30.09.2024 வரை) ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான 2024 காரிஃப் பருவத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு சுமார் ரூ.24,420 கோடி ஆகும்.
திட்ட பயன்கள்
விவசாயிகளுக்கு மானிய விலையில், உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். சர்வதேச உரங்கள், இடுபொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு பாஸ்பேட், பொட்டாஷியம் உரங்களுக்கான மானியத்தை சீரமைக்க உதவும். ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத்தில் மூன்று புதிய தரங்களைச் சேர்ப்பது சமச்சீரான மண் வளத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்கும்.
மேலும் மண்ணின் தேவைக்கு ஏற்ப நுண்ணூட்டச்சத்துக்களுடன் செறிவூட்டப்பட்ட உரங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு விவசாயிகளுக்கு மாற்று வழிகளை வழங்கும்.