மாணவர்களின் சிந்தனை செயல்கள் என ஒவ்வொன்றிலுமே திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அரசுப்பள்ளிகளில் சிறார் படங்கள் திரையிடப்படும் என்றும், அதனை சிறப்பாக விமர்சனம் செய்யும் மாணவர்களை தேர்வு செய்து வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது..
அதன்படி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, மாதந்தோறும் திரையிடல் திட்டம் ஒன்றை சிறார் திரைப்பட விழா என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை வகுத்துள்ளது.. இதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.. அதில் “ 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும்.. திரைப்படத்திற்கென ஒதுக்கப்பட்ட பாடவேளைகளில் மட்டுமே படங்களை திரையிட வேண்டும்..
படம் திரையிடுவதற்கு முன்பும், பின்னும் அதுகுறித்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும்.. எந்த படங்களை திரையிடுவது என்பது குறித்த விவரங்களை ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பும்.. திரைப்படம் குறித்த விமர்சனத்தை மாணவர்கள் கட்டாயம் எழுதி தர வேண்டும்.. பள்ளியளவில் சிறப்பாக விளங்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில், மாநில அளவில் வாய்ப்பு வழங்கப்படும்.. வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவும் அழைத்து செல்லப்படுவார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..