‘நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும்’ என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை ஏற்கும், அதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக தலைமையின் கீழ் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். மக்களை ஏமாற்றும் நோக்கில் பல பொய்யான தேர்தல் அறிவிப்புகளை வழங்கி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தல் திமுகவுக்கு சரியான பாடமாக அமையும். திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. திமுக மீது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

தமிழக நிதியமைச்சர் அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசி வருவதால், அரசு ஊழியர்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிதி அமைச்சர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டுகிறார். அவரை முதலில் மதுரை முழுவதும் ஆய்வு செய்ய சொல்லுங்கள். கமிஷன் பெறுவதற்காக மாநகராட்சி பணிகளை நிதி அமைச்சர் நிறுத்தி வைப்பதாக திமுகவினரே குற்றம்சாட்டுகின்றனர்.” இவ்வாறு அவர் பேசினார்.