தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு பல்வேறு நடத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்றவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும், 2024ஆம் ஆண்டு பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் மாணவ, மாணவிகளும் பயன்பெற்று வருகின்றன.
அந்த வகையில், பெண்களுக்கு ரூ.50,000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதன்படி, ரூ.1 கோடி ஒதுக்கீட்டில் 200 பெண்களுக்கு சுயத்தொழில் செய்ய ஏதுவாக ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு இந்த பணம் வழங்கப்படும்.
அடுத்ததாக, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் ரூ.4,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. தமிழுக்குத் தொண்டாற்றிய அகவை முதிர்ந்த தமிழறிஞர்களிடமிருந்து 2024-2025ஆம் ஆண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதிகளாக, ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கான சான்று இருக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு இருக்க வேண்டும்.
அடுத்ததாக, மாணவர்களுக்கான ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் இந்தாண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி கோவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. ஏற்கனவே, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ’புதுமைப்பெண்’ திட்டம் அமலில் உள்ள நிலையில், இத்திட்டம் மூலம் 2.73 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். 2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ஏராளமான நிதியுதவி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல், 2026இல் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், மேலும் சில புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.