மக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் ரூ.1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உள்ளிட்ட பலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”ஆருத்ரா கோல்டு நிறுவனம் அதிமுக ஆட்சியில் இருக்கும்போது தொடங்கப்பட்டது என தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விசாரிக்கப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பொதுமக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.