இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைப் போன்றே, நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்படாதவரை, ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றவர்களிடமிருந்து இடைவெளியுடன் இருப்பது, முகக்கவசங்களை அணிந்துகொள்வது, வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது ஆகிய நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூச்சுவிடுவதில் சிரமம், அதிக அளவில் காய்ச்சல் அல்லது தீவிர இருமல் ஆகியவை 5 நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மிதமான அல்லது தீவிர பாதிப்பு உள்ளவர்கள், 5 நாட்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடு, இரவு நேர ஊரடங்கு, முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.