நான் தமிழகத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து இருந்தால் ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்து உள்ளே வைத்திருப்பேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வதம்பச்சேரியில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். அப்பொழுது அங்கிருந்த பெண்மணி ஒருவர் ஜி.எஸ்.டி, நீட் தேர்வு ரத்து உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அவர்; முதல்வர் ஸ்டாலின் மீது எப்.ஐ.ஆர்., போட்டு உள்ளே வைத்தால், எந்த குழந்தையும் இறக்காது.
நான் தமிழகத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து இருந்தால் ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்து உள்ளே வைத்திருப்பேன். உயிரே போனாலும் ‘நீட்’ தேர்வை எக்காரணம் கொண்டும் பாஜக ரத்து செய்யாது. எந்த குழந்தையும் ‘நீட்’ தேர்வு காரணமாக இறப்பதில்லை. இறப்பதற்கு இங்குள்ள திராவிட கட்சியிர் தூண்டுகின்றனர். ஏழை மாணவர்கள் ‘நீட்’ மூலமாக அரசு மருத்துவக் கல்லுாரிக்கு செல்கின்றனர்” என்றார்.
கடந்த பத்து ஆண்டுகளில், நமது பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்த திட்டங்களான, ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தில், ஒவ்வொரு கிராமத்துக்கும் பல கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், முழுமையாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி கிடைக்காமல் இருக்கிறது. வீடுகள் இல்லாதவர்கள் அனைவருக்கும் மோடி வீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
இத்தனை ஆண்டுகளாகப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், தங்கள் முக்கியப் பணிகளான இவை எதையும் நிறைவேற்றவில்லை. கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.1,445 கோடி நிதி ஒதுக்கியும், சாலைகள் கூட சரிவர மேம்படுத்தப்படாமல், அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிராமங்களை சென்றடையாமல் வைத்திருக்கிறார்கள். கோவை வளர்ச்சிக்காகப் பேச வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், பத்து ஆண்டுகளாக தொகுதிக்காக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்றார்